IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை திருவாதவூர் வெள்ளிமலை கோவில் காடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்

21

மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகில் உள்ளது இடையப்பட்டி. வெள்ளிமலை என்பது அவ்வூரின் தெய்வம் ஆண்டி முருகன் குடிகொண்டுள்ள குன்றின் பெயர். வெள்ளிமலை ஆண்டிமுருகன் கோவிலை சுற்றி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உசில் மரங்கள் அடர்ந்து நிறைந்திருக்கும் காடுதான் வெள்ளிமலை கோவில் காடு.

 

நரி, தேவாங்கு, உடும்பு, பாம்பு, கீறி, முயல், முள்ளெலி உள்ளிட்ட விலங்குகள் வாழும் பகுதியாக விளங்கியது. சுத்துப்பட்டி கிராமங்களின் ஆடு, மாடு மேய்ச்சல் காடாக விளங்கிய அக்காட்டில் கால்நடை மற்றும் காட்டு விலங்குகளின் தாகம் தீர்க்க சேங்கை ஊரணி மற்றும் தண்ணித்தாவு கண்மாய் காட்டின் வடக்கு திசையில் உள்ளது.

 

பன்னெடுங்காலத்திற்கு முன்பு காட்டின் நடுவில் பெரிய ஆறு ஒன்று ஓடியது போல நீண்ட பாறைகள் நீரால் அரிக்கப்பட்டது போன்று பரவி கிடக்கும். வெள்ளிமலை காடு மழைநீர் பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. அக்காட்டில் பெய்யும் மழைநீர் வடிந்து அருகிலுள்ள கண்மாய்களுக்கு செல்கிறது. அதனை நம்பி விவசாயமும் மீன்பிடி தொழிலும் நடக்கிறது.

 

வெள்ளிமலை கோவில்காடு அமைந்துள்ள இடையப்பட்டி என்பது இடையர்கள் பட்டி போடும் ஊர் என்பதால் இடையர்பட்டி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் இடையப்பட்டி ஆனது.

 

இடையர் என்றால் கால்நடை மேய்ச்சல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்று சங்க இலக்கியம் சொல்லுகிறது. அக்காட்டில் சுள்ளி பொறுக்குவது, உசிலமர இலைகளை பறித்து அரப்பு தயாரிப்பது, காட்டு தாவரங்களை கொண்டு மூலிகை செய்வது போன்று சிறு தொழிலகளையும் செய்து வந்தனர்.

 

தங்கள் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் வெள்ளிமலை காடு தந்தது. தங்களையும் தங்கள் தலைமுறைக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் வெள்ளிமலை காட்டை தெய்வமாக கருதி வழிபட்டனர். காட்டுக்குள் செருப்பணிந்து செல்ல கூடாது,

 

காட்டில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது, காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட கூடாது, காட்டை பாதுகாப்பது ஊரார் தங்கள் கடமையாக கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் ஊர் கட்டுப்பாடாக மாறியது.

 

காட்டில் உள்ள அனைத்தும் தெய்வத்திற்கு சொந்தமானது. காட்டுக்கு தீங்கு விளைவித்தால் அது தெய்வ குத்தமாகிடும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் வேரூன்றியது. எனவே ஊர் கட்டுப்பாடுகள் என்பது மக்களின் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்.

 

ஊர் கட்டுப்பாடை அறியாது அயலவர்கள் யாரும் காட்டுக்குள் சேத்துப்படுத்தும் நோக்கத்தோடு நுழைவதை தடுக்க ஊர் சபை கூடி காட்டை பாதுகாக்க பாதுகாவலர்களை நியமித்தது. ஒவ்வொரு இரவும் காவலர்கள் காட்டை சுற்றி வலம் வருவார்கள். காட்டை சேதப்படுத்துவோரை பிடித்து காவலர்கள் ஊர் மந்தை முன்பு நிறுத்துவார்கள்.

 

தண்டனையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு ஊர் பொது நிதியில் சேர்த்து விடுவார்கள். காவல் பணி செய்யும் நபர்களுக்கு அறுவடை காலங்களில் ஊக்க தொகையும் ஒரு நபருக்கு ஒரு மரக்கா நெல் என்கிற வீதம் ஊதியம் வழங்கப்படும்.

 

 

வனங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொள்கை, சட்டம், மனிதவளம் கொண்ட ஒரு அதிகார அமைப்பாக வனத்துறை என்கிற ஒரு துறை மேற்கத்திய நாடுகளில் வளர்வதற்கு முன்பே தமிழகத்தில் அத்தகையை நடைமுறை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.

 

தலைமுறை தலைமுறையாக வனங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருப்பதை எளிமைப்படுத்தும் முயற்சியே காட்டை தெய்வமயமாக்குதல்.

 

கோவில்காடு என்பது நாட்டார் தெய்வம் குடி கொண்டுள்ள மரம், செடி, கொடி, புதர், விலங்குகள், நுண்ணுயிர்கள் என பல்லுயிர் சூழல் கொண்ட இயற்கையான அமைப்பாகும். நந்தவனம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தோப்பாகும்.

 

கோவில்காடு நாட்டார் தெய்வ (அம்மன், சுடலை, அய்யனார் உள்ளிட்ட) வழிபாட்டோடு தொடர்புடையது. நந்தவனம் பெருந்தெய்வ (சிவன், பெருமாள்) கோவிலோடு தொடர்புடையது. இவ்வாறாக தமிழ்நாட்டில் மட்டும் 448 கோவில்காடுகள் 28 மாவட்டங்களில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

விவசாயம் தோன்றுவதற்கு பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கோவில்காடுகள் பற்றிய கருத்துருவாக்கம், மனிதன் காடோடியாக அலைந்து திரிந்த நாட்களிலேயே, தோன்றிவிட்டது என்று வரலாற்று அறிஞர் கோசாம்பி கூறுகிறார்.

 

 

கோவில்காட்டின் பாதுகாவலர்கள் மக்கள்தான். அதனால்தான் கோவில்காடுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறையின் கீழுள்ள காடுகள் தேயிலை, தேக்கு, தைல மரங்கள் நிறைந்த தோப்பாக மாறி, புலிகள், யானைகள் வாழ தகுதியற்ற காடுகளாக்கபட்டு விட்டன.

 

இதன் வழி மக்கள் நமக்கு சொல்லுகிற வரலாற்று செய்தி ஒன்றுதான். சுற்றுச்சூழல் அல்லது பசுமை பாதுகாப்பு என்பது இருக்கிற வளங்களை பறிகொடுத்துவிட்டு புதிய மரக்கன்றுகளை நடுகிற நிகழ்ச்சியல்ல. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கூட்டத்திடம் இருந்து பாதுகாக்கிற மக்களின் புரட்சிகர நடவடிக்கையாகும்.

 

சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளிமலை கோவில்காடு இராணுவ முகாம், காவல்துறை குடியிருப்பு உள்ளிட்ட திட்டங்களால் அழிக்கப்பட்டு இப்போது வெறும் 100 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது.

 

மிச்சம் இருக்கிற காட்டையும் கூறுபோடும் திட்டங்கள் தயாராகிவிட்டன. இத்தனை ஆண்டுகாலமாக அந்த மக்கள் வெள்ளிமலை கோவில்கட்டை பாதுகாத்து நம் கையில் ஒப்படைத்து சென்று இருக்கிறார்கள்.

 

முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றதை நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கையளித்துவிட்டு செல்கிற கடமை நமக்கும் இருக்கிறது. வெள்ளிமலை கோவில்காட்டின் தெய்வங்கள் மக்கள்தான்.

 

வெள்ளிமலை காடு தன்னை பாதுக்காக்கும் தெய்வங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது. மதுரை வெள்ளிமலை காடு நம் பிள்ளைகளின் சொத்து…