Menu

இதுவும் ஹெல்மெட் பஞ்சாயத்துதாங்க! லத்தி வீசி மண்டையையும் உடைச்சிட்டு, ட்ரீட்மெண்ட் செலவையும் ஏற்ற போலீஸ்!

போலீசுக்கும், ஹெல்மெட் பஞ்சாயத்துக்கும் இது போதாத காலம் என்று சொல்லும் அளவுக்கு வாரத்துக்கு ஒரு ஹெல்மெட் பிரச்சினை போலீசாரின் மண்டையை குடைந்து விடுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்று கோர்ட் சொல்றதும்; கோர்ட் உத்தரவை தீவிரமா அமல்படுத்த போலீசார் துடிப்பதும் வாடிக்கையாகி விட்டது.


இதற்கு நடுவில் நல்ல ரோடு போட நீங்க ரெடியா? ஹெல்மெட் போட நாங்க ரெடின்னு பஞ்ச் டயலாக் போஸ்டர் ஒட்டுறவதிலும், சோஷியல் மீடியாவில் ஸ்டேட்டஸ் போடுவதிலும் நாட்டு மக்களும் அப்பப்ப பிஸியாகிடுறாங்க.


இந்த ஹெல்மெட் கட்டாயச் சட்டம் தேவையா? இல்லையா என்று வாரம் ஒருமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக போலீஸார் ஹெல்மெட் போடாதவர்களை எட்டி உதைப்பதும், பைக் வீலுக்குள் லத்தி விடுவதையும் வாடிக்கையாக்கி விட்டார்கள்.


கடந்த ஆண்டு கர்ப்பிணி மனைவியுடன் பைக்கில் ஹெல்மெட் போடாமல் வந்த ஒரு தம்பதியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எட்டி உதைத்து, அதில் கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல கடந்த மாதம் மதுரையில் ஹெல்மெட் போடாமல் சென்றவரை போலீசார் லத்தி வீசி தாக்கியதில் அவர் பலியானார்.


இப்படி மாதம் ஒரு ஹெல்மெட் தாக்குதல் கேஸ் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் , இதோ மேலும் ஒரு சம்பவம் மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.


ராமநாதபுரம் அருகே துரத்தியேந்தலைச் சேர்ந்த மாரிக்கண்ணு , அவரது கணவர் வெள்ளூர் ஆகியோர் கண்ணன் என்பவருடன் ராமநாதபுரத்திலிருந்து துரத்தியேந்தலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் போலீசார் தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


போலீசாரைப் பார்த்ததும் பைக்கில் ட்ரிபிள்ஸ் போனவர்கள் பயந்து விட்டனர். இதனால் போலீஸ்காரர்கள் பைக்கை மறித்த போது நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் கோபமடைந்த போலிஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கியுள்ளார். இதில் பைக் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாரிக்கண்ணு தலையில் காயம் ஏற்பட்டது.


வலியால் அலறி துடித்த மாரிக்கண்ணு ரத்தம் சொட்ட சொட்ட நடு ரோட்டி விழுந்து கிடந்தார். இதையடுத்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் போலீசாரின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்ததுடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்.


போலீசாரோ… முதலில் அடிபட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தயவுசெய்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டு ஆட்டோ மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் அந்த பெண்ணின் சிகிச்சைச் செலவுகளை போலீசாரே ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மாவட்ட எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா கூறுகையில், இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, போலீசார் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


ஏற்கனவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது அத்துமீறுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில் , இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments