Menu

மனித முகமும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகம்

மதுரையிலிருந்து வடக்கில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவாதவூரின் சிறப்புகளில் ஒன்று. 12-13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேதநாயகி – திருமறைநாதர் திருக்கோவில் ஆகும். சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று பெயர் பெற்றது என்பர்.

 

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவரான திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்பது மற்றுமொரு சிறப்பாகும். மாணிக்கவாசகருக்கு இவ்வூரில் கோவில் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. விஷ்ணு தீர்த்தம் என்றழைக்கப்படும் திருவாதவூர் கண்மாய் நீர் அளவை கற்தூண் மீது புருஷா மிருகம் நிறுவப்பட்டுள்ளது.

 

புருஷா மிருகம் என்பது மனித முகமும், சிங்க உடலும் கொண்ட மிருகமாகும். இம்மிருகம் சிவபெருமானின் பெரும் பக்தனாகவும், குபேர வனத்தினை பாதுகாக்கும் செயலை செய்து வருவதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

 

புருஷா மிருகம் என்பது கோவிலின் சன்னதிகளில் காணப்படுகிற உருவமாகும். அத்தகை சிலை எவ்வாறு கண்மாய் மடை அருகில் உள்ள நீர் அளவை கற்த்தூண் மீது அமர்த்தப்பட்டது என்பதனை ஊகிக்கும் சிறு முயற்சியே இப்பதிவு.

 

ஒவ்வொரு கண்மாயின் கரை, மடை, மதகு, கலிங்கு, படித்துறை உள்ளிட்ட அமைப்புகளில் மக்கள் தங்கள் காவல் தெய்வத்தை ஏற்றி வழிபடுவது நாட்டார் தெய்வ தொன்மை வழக்கமாகும். நீர்நிலை மீது தெய்வத்தை ஏற்றுவது என்பது அதிகாரத்தை கைப்பற்றுகிற முயற்சியாகும்.

 

வேளான் நிலங்களுக்கு நீரை திறந்துவிடுகிற அதிகாரத்தை பலி கொடுக்கபட்ட அல்லது உயிர் தியாகம் செய்கிற தங்கள் சமூகத்து மாந்தரை தெய்வமாக ஏற்றி ஒடுக்கபட்ட சமூகம் வேளான்குடிகளிடம் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கிற நடைமுறையாகும்.

 

 

தமிழர்கள் நீரை வழிபடும் மரபை கொண்டவர்கள். நீர்நிலையில் அருகில் அம்மனை அமர்த்தி மழை வேண்டி திருவிழா எடுப்பது என்பது தமிழரின் ஆன்மவியலோடு கலந்த நடைமுறையாகும்.

 

மாரியம்மன் என்பதே மழை தெய்வம் என்பர். தமிழ்ச்சமூகம் தாய்வழி சமூகம் என்பது பண்பாடு ஆய்வாளர்களின் கருத்து. அம்மன் வழிபாடு இல்லாத ஊர்கள் தமிழகத்தில் இல்லை என்னுமளவுக்கு தாய்வழி சமூகத்தின் நீட்சி தமிழகத்தில் காணப்படுகின்றன.

 

மூன்று திசையும் கடல் சூழ்ந்த தமிழகத்திற்கு எதிரிகள் அல்லது ஆபத்துக்கள் வடக்கில் இருந்தே வரும் என்கிற காரணத்தால்தான் அம்மன் சிலைகள் பெரும்பாலும் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

 

ஆகம விதிப்படி பெருந்தெய்வ கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும். அவ்வாறு திருவாதவூர் ஊர் எல்லையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிடாரி அம்மன் மற்றும் வெங்கம்மாள் எனும் தீய்ப்பாய்ந்த அம்மன் திருக்கோவில்.

 

பிடாரி அம்மன் கோவில் இடப்புறம் திருவாதவூர் கண்மாய் அமைந்துள்ளது. திருவாதவூர் கண்மாய் கிழக்கு கரையில் நீர் அளவு கல்லும் அதன் எதிரே மடையும் உள்ளது.

 

கண்மாய் நீரின் அளவை பொறுத்து மடையில் நீரை பாசனத்திற்கு திறந்துவிடும் பண்டைய நடைமுறையாக இதனை பார்க்க முடிகிறது.

 

உருவமற்று அல்லது சிறு கல் போன்ற வடிவில் ஒவ்வொரு கண்மாய் மடையிலும் காவல்தெய்வமான கருப்பு வீற்றிருப்பார். மடை கருப்புக்கு வழிபாடு நடத்தி பாசனத்திற்கு நீரை திறந்துவிடுவது நாட்டார் வழக்கம்.

 

 

திருவாதவூர் மக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் நூறு தேங்காய்களை தீயிலிட்டு கருக்கி, கருப்பு மையாக்கி, மேளதாளத்துடன் புறப்பட்டு கண்மாய்க்கு வருவர்.

 

அந்த கருக்கை சாந்தை நீர்அளவு கற்தூணின் மேலுள்ள புருஷாமிருகத்தின் மீது பூசுவர். இதற்கு “கருப்பு சாத்துதல்’ என்று பெயர்.

 

அத்தோடு வெங்கம்மாள் என்னும் தீப்பாய்ந்த அம்மனுக்கு படையல் இடுவர். இதனால், பருவமழை தப்பாமல் பெய்யும் என்பது அம்மக்களின் நம்பிக்கை.

 

அம்மன் மற்றும் மடை கருப்பின் மீது மக்கள் கொண்டிருந்த செல்வாக்கைய சைவ மதம் தன் வசப்படுத்தி கொள்ள புருஷா மிருகம் எனும் புராண கதை பாத்திரத்தை திருவாதவூர் கண்மாய் நீர்அளவு கல்லின் மீது நிறுவி இருப்பதாக நாம் ஊகிக்க முடிகிறது.

 

வைதீக மதத்தின் ஏற்றத் தாழ்வு அடுக்குகளை உடைத்து, பௌத்த மதம் மக்களிடம் பெற்ற செல்வாக்கை தன் வசப்படுத்திக் கொள்ள, வைதீக மதமானது புனிதம், தீட்டு போன்ற வேத இறுக்கங்களை வேறு வழியில்லாமல் தளர்த்திக் கொண்டு அரச மரத்தடியில் புத்தனை அகற்றிவிட்டு விநாயகரை குத்த வைத்தது போல…

 

Facebook Comments