IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புஷ்கார விழாவில் அம்மனாக மாறப்போகும் வைகை நதி! ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்

13


பாரம்பரியம்மிக்க நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கார விழா (100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழா) நடத்தப்பட்டது போன்று வைகை நதிக்கான விழா ஒன்றினை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறது என்று அகில பாரதிய துறவிகள் சங்கத் துணைத் தலைவர் தவத்திரு சுவாமி ராமாநந்தா தெரிவித்துள்ளார்.


சங்கம் வைத்து வளர்த்த மதுரையில் முதன் முறையாக மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. இந்த மகா புஷ்கர விழாவானது காவிரியில் 2017 ஆம் ஆண்டும், தாமிரபரணியில் 2018 ஆம் ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு வைகை புஷ்கர விழா வருகிற ஜூலை24 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவானது வைகையின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்பட உள்ளது.


இதுபற்றி அகில பாரதிய துறவிகள் சங்கத் துணைத் தலைவரும், வைகை பெரு விழாவின் தலைவருமான தவதிரு சுவாமி ராமாநந்தா கூறுகையில், ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு மாதம் விசேஷம் அதுபோல வைகைக்கு ஆடி மாதம் விசேஷம். ஆடி மாதத்தில் வைகை அம்மனாக மாறுவதாக ஐதீகம். அதனால்தான் ஆடிமாதம் இந்த வைகை பெருவிழாவை நடத்த உள்ளோம்.வைகை நதியை மீண்டும் வற்றாத நதியாக மாற்றும் நோக்கில் இந்த விழா நடைபெற உள்ளது. சங்கத் தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை நம்ம சித்திரை திருவிழாதான். அதுபோல இந்த வைகை பெருவிழாவும் பிரபலமாகும். நம் சந்ததிகளுக்கு வைகையை பாதுகாக்கும் எண்ணத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் 12 நாட்கள் நடைபெற உள்ளது, என்றார்.


|மேலும் அவர் கூறுகையில், இந்த விழாவில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து புனித நீரை தெளித்து பூஜைகள் மேற்கொள்ள, புட்டுத் தோப்பு பகுதி வைகை நதியில் 40-க்கு 60 அடியில் பெரிய குளம் வெட்டப்பட்டுள்ளது.அந்த குளத்தில் மூல வைகையில் இருந்து கொண்டுவரப்பட்ட நீருடன் 108 புனித நீரை ஊற்றுகிறார்கள். அன்று ஆடிபெருக்கு விழா என்பதால் கூடுதல் விசேஷம், என்றார்.


இந்த விழாவானது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி முடிவடைகிறது. ஜுலை 24 ல் துறவியர் மாநாடு, 25-ல் வருண ஜெபம், 26-ல் சாக்த பெண்கள் மாநாடு, 27-ல் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு, 28-ல் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு, 29-ல் வைணவ மாநாடு, 30-ல் சிவனடியார்கள் மாநாடு, 31-ல் பாரதீய பசுவன பாதுகாப்பு மாநாடு, ஆகஸ்ட் 1-ல் முத்தமிழ் மாநாடு, ஆக2-ல் நதி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு, ஆக3-ல் சன்மார்க்க மாநாடு மற்றும் சித்தர்கள் மாநாடு நடக்கிறது.அன்றுதான் ஆடிப்பெருக்கு விழா என்பதால் அந்த விழாவையும் வைகையில் கொண்டாட உள்ளோம்.ஆக4-ல் விழா நிறைவடையும்.


மதுரையின் பாரம்பரிய விழாக்களை மீட்டெடுக்கவும், நமது வாழ்வின் ஆதாரமாக விளங்கும் நதிகளை பாதுகாக்கவும், இந்த மகா புஷ்கர விழாவனது நடத்தப்பட உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம் எல் ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.