IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரையில் ஆடம்பர ஆசையால் உடல் கருகி பலியான மாணவன்! தீ வைத்து எரித்த தாய் கைது!!

18


மதுரை ஒத்தகடையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு பணம் கேட்டு நச்சரித்து கல்லூரி மாணவனை, அவரது தாய் மண்எண்ணை ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை ஒத்தகடை அருகே காளிகாப்பானைச் சேர்ந்தவர் பாண்டிகாளை, சரோஜா தம்பதியரின் மகன் அஜித்குமார் (வயது 22). இவர் மதுரை கே.கே. நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சரோஜா கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி மகனை படிக்க வைத்துள்ளார்.


ஆனால், தனது தாய் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து தன்னை படிக்க வைக்கிறார் என்பதை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத, அஜித்குமார் நண்பர்களோடு சேர்ந்து ஆடம்பரச் செலவுகளைச் செய்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை தெரியாமல் இப்படி ஊர் சுற்றுகிறானே என்று சரோஜா மிகுந்த மனமுடைந்து காணப்பட்டார்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த பைக் வாங்கித் தரும்படி சரோஜாவிடம் அஜித் கேட்டிருக்கிறார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லியும் கேட்காத மகனை சமாதானப்படுத்த, கடன் வாங்கி பைக் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு மகனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் பைக்கை எடுத்துக் கொண்டு அதிகமாக ஊர் சுற்றியதோடு பெட்ரோலுக்குப் பணம் கேட்டு தினமும் தொந்தரவு செய்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு செலவுக்கு ரூ.40 ஆயிரம் பணம் வேண்டும் எனக் கேட்டார் அஜித்குமார். இளகிய மனம் படைத்த தாய், தெரிந்த நபர் ஒருவரிடம் இருந்து ரூ10 ஆயிரம் கடன் வாங்கி மகனிடம் கொடுத்துள்ளார். 40 ஆயிரம் கேட்டல், வெறும் 10 ஆயிரம் ரூபாய் தருகிறாயா? அந்த பணம் போதாது எனக் கூறி தாய் சரோஜாவிடம், அஜித் சண்டை போட்டுள்ளார். இந்த சண்டையால் ரொம்பவே விரக்தி அடைந்தார் சரோஜா.


இப்படி குடும்ப சூழ்நிலை தெரியாமல் ஆடம்பரமாக வெட்டிச் செலவு செய்யும் மகனை நினைத்து கலங்கினார். ஒரு கட்டத்தில் இப்படியொரு மகன் இருப்பதற்கு இல்லாமலேயே போயிடலாம் என நினைத்த சரோஜா, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.

மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அஜித்குமார் பலியானார்.


இந்த சம்பவம் குறித்து ஒத்தகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகனை மண்எண்ணை ஊற்றீ தீவைத்துக் கொளுத்திக் கொன்ற குற்றத்திற்காக தாய் சரோஜாவை கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.