Menu

மதுரைக்கு பலவித பெயர்கள் உண்டான வரலாறு

சில ஊர்களின் பெயர்களை சொல்லும் போது அவை சுற்றுலா செல்வதற்கான இடமாக மட்டுமே தோன்றும். ஆனால் சில ஊர்களின் பெயர்களை கேட்கும் போது அதன் வரலாறும் அந்த மக்களின் வாழ்வியலும் நமது கண் முன் தோன்றும் அப்படி ஒரு ஊர் தான் மதுரை.

 

மணமணக்கும் மல்லிகை, சுடசுட சுக்கு காபி போன்ற மென்மையான இட்லி, ஜில் ஜில் ஜிகர்தண்டா, பார்த்த இடமெல்லாம் நம் கண்ணைக் கவரும் கோயில் கோபுரங்கள், அது மட்டுமா அன்றே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய ஊர்.

 

இந்திய துணைக் கண்டத்திலேயே தொன்மையான வரலாற்று சிறப்பைக் கொண்ட நகரங்களில் ஒன்று. மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலகில் அனைவராலும் அறியப்பட்ட மிக பிரபலமான இடம்.

 

2500 ஆண்டுகள் பழமையான மதுரை முந்தைய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கடம்ப வனம் என்றும் மருத மரங்கள் அதிக அளவில் இருந்ததால் மருதை என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின் காலப்போக்கில் மருதை மதுரையாக திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

 

அனைவரும் இங்கு கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல் செய்ததால் இதற்கு கூடல் நகர் என்ற பெயரும் உருவானதாக கூறப்படுகிறது. கோட்டையின் நான்கு வாயில்களிலும் நதிகள் சங்கமிப்பதால் நான்மாடக்கூடல் என்ற பழமையான பெருமை மிகுந்த பெயரும் உண்டு.

 

நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர் என்பதால் இதற்கு ஆலவாய் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த ஆலவாய் எனும் பெயர் வர புராண கதையும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த ரசனை மிகுந்த கதை இதோ. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை மாநகர். பாண்டிய மன்னன் மதுரையை ஆண்ட சமயம் அம்மன்னன் மதுரையை விரிவுப்படுத்த எண்ணி இறைவனிடம் மதுரையின் எல்லையை வரையறுத்து தருமாறு வேண்டினான்.

 

இறைவன் அப்போது தன் கையணியாகி பாம்பிடம் எல்லையை வரையறுக்கும் படி ஆணையிட்டார். அதற்கிணங்க பாம்பும் தனது வாலை நீட்டி வலப்புறமாக தனது உடலை வளைத்தது.

 

அந்த வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரைக்கு ஆலவாய் எனும் சிறப்பு பெயர் அமைந்துள்ளதாக திருவிளையாடற் புராணம் எடுத்துரைக்கிறது.

 

ஆலவாய் என்பதன் சொல் விளக்கம் ஆலம் என்பதற்கு நஞ்சு என்று பொருள். நஞ்சுடைய பாம்பினைக் குறிப்பதே ஆலவாய். மேலும் மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் உருவானதாகவும் ஒரு கதை உண்டு.

 

அடுத்ததாக மதுராபுரி எனும் பெயர் மதுரைக்கு வந்த கதையைப் பார்ப்போம். மதுரம் என்றால் இனிமை என்றும் பொருள். தனஞ்செயன் எனும் விவசாயி ஒரு முறை வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது கடம்ப மரம் ஒன்றின் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும் கடவுளின் கடவுளான இந்திரன் அந்த சுயம்பு லிங்கத்தை வணங்கி கொண்டிருப்பதையும் பார்த்த அந்த விவசாயி அந்த செய்தியை உடனே குலசேகர பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார்.

 

பின் மன்னன் உடனே அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அந்த சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்து புதிய நகரம் உருவாக்கவும் உத்தரவிட்டார். அதே போல் நகரம் உருவாக்கப்பட்டது.

 

அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மன்னர் மற்றும் அனைவரும் சிந்தித்த வேளையில் சிவப்பெருமான் அங்கு தோன்றி தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவி அந்த புதிய நகருக்கு மதுராபுரி என்றும் பெயர் சூட்டப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

 

பழமையான நாகரீகம்

 

உலகில் தோன்றிய மிக மிக பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்று. கி.மு.4000 முதல் கி.மு.2௦௦௦ ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறுப்பட்ட நாகரீகங்கள் தோன்றியிருந்தன.

 

மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகம் போன்ற பல நாகரீகங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகமும் தோன்றியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றான.

 

இது நமக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் இந்த செய்தி சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள், இன்று நம் பார்வைக்கு காட்சி வடிவாகயிருக்கும் மதுரையை விட மிக செல்வ செழிப்பு மிக்க நகரமாக இருந்தது என்பதை உறுதி செய்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பண்டைய காலம்தொட்டு இன்றைய நவீன எந்திரமயமான உலகம் வரை மதுரை மாநகரம் தமிழரின் பெருமையை பேவும் விதம் இருப்பதற்கு ஒரே காரணம்,

 

மூவேந்தர்களில் பாண்டியர்களே 16 ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி ஆட்சி நடத்திய குறிப்பையும், அவர்களின் தொடர்ச்சியாக நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மிகு நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சுவடுகளில் திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

 

இன்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே திருமலை நாயக்கர் மஹால் மிகச்சிறப்பாக சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு கம்பீரமாகவும், தொன்மை தொணியிலும் காட்சியளிக்கின்றது.

 

மதுரை நகரின் அமைப்பு சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்து உள்ளது. மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரையின் பொற்காலமாக இருந்து உள்ளது.

 

இன்றைய மதுரையின் பெரும்பாலான மையப்பகுதிகள் நாயக்கர்களால் கட்டப்பட்டதே. எல்லா இன்பமான வாழ்விற்கு பின்னும் பல இன்னல்களும் சோதனைகளும் நிச்சயம் இருந்திருக்கும் அது போல் தான் மதுரையும். சுல்தான்கள் நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல சோதனைகளையும், சாதனைகளையும் கண்டுள்ளது மதுரை மாநகர்.

 

Facebook Comments