Menu

மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க 3.44 கோடி ஒதுக்கீடு


மதுரை மாநகராட்சியில் வறட்சியால் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மாநில அரசு 3.44 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இம்மாநகராட்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.


இவர்களுக்கு தேவையான குடிநீர் வைகை திட்டங்கள் 1 மற்றும் 2, காவிரி கூட்டு திட்டம், போர்வெல்கள் மற்றும் இதர நீர் ஆதாரங்கள் மூலம் பெறப்படுகிறது.


இத்திட்டங்கள் மூலம் வழக்கமாக 175 எம்.எல்.டி., வரை குடிநீர் கிடைத்தது. கோடையில் மழையின்றி நிலவிய வறட்சியால் 45 எம்.எல்.டி., வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதனால் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் சீராக குடிநீர் சப்ளை செய்ய இயலவில்லை. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.


சில வார்டுகளில் பலர் மின் மோட்டார் பம்ப் மூலம் குடிநீர் திருடுகின்றனர். இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. சில நாட்களாக புது நத்தம் ரோட்டில் மேம்பால பணிகள் நடப்பதால் காவிரி திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சப்ளையில்லை.


மாநகராட்சி லாரிகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை. இந்நிலையில் பற்றாக்குறையாகவுள்ள 45 எம்.எல்.டி., குடிநீரை பெற நீர் ஆதாரங்களை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் மாநில அரசிடம் நிதி கோரியது.


இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயரதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.


அதையடுத்து அரசு 3.44 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் போர்வெல்கள், ஆற்றுப்படுகையிலுள்ள கிணறுகள், பழுதான மின்மோட்டார்கள் புனரமைக்கப்படவுள்ளன. புதிதாக போர்வெல்கள் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Facebook Comments